உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காக்கிச்சட்டைக்குள் கருணை இதயங்கள்; இப்படித்தான் இருக்க வேண்டும் காவலர்கள்... ---------------------------------- சேவையால் மனம் குளிரும் மக்கள் நெஞ்சங்கள்

காக்கிச்சட்டைக்குள் கருணை இதயங்கள்; இப்படித்தான் இருக்க வேண்டும் காவலர்கள்... ---------------------------------- சேவையால் மனம் குளிரும் மக்கள் நெஞ்சங்கள்

மரத்தடியே வாழ்க்கை; மாற்றுத்திறனாளி அமுதாவுக்கு, சொந்த பந்தம் யாரும் இல்லை.கே.வி.ஆர்., நகரில் பணியில் இருந்த தலைமைக்காவலர் பிரசாந்த், இதைக் காண்கிறார்; இளகுகிறது மனசு.அப்பகுதியிலேயே ஒரு இடத்தில், 'தகர ெஷட்' வீடு உருவாகிறது. கல், மண், கம்பி என 15 ஆயிரம் ரூபாய் செலவு.தன் கரங்களால் பிரசாந்த் அதைக் கட்டமைத்தபோது, அப்பகுதியினரும் உதவ முன்வருகின்றனர். அதுதானே மனிதம்!மாற்றுத்திறனாளி உதவித்தொகையையும் அமுதா பெறுவதற்காக, பிரசாந்த் முனைந்துள்ளார். கலெக்டர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.குற்றங்களைத் தடுப்பதற்காக மட்டுமல்ல; மனிதநேயம் காப்பதற்கும்தான் காவலர்கள்; ஆனால், மக்கள் பெரும்பாலானோரிடம், இதற்கு நேர்மாறான எண்ணம்; காவலர்களைக் கண்டால் பலருக்கும் பயம்; ஒதுங்கிச்சொல்லும் மனோபாவம். இதற்கான மூல காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் மக்களுடன் நல்லிணக்கத்துடன் செயல்படுவதற்காக பணிபுரிபவர்கள்தான். இத்தகைய எண்ணத்தை உருவாக்கும் முனைப்பு, திருப்பூரில் துவங்கியிருக்கிறது.சாத்தியமான மாயாஜாலம்பிரசாந்த்தின் செயல்பாடு ஒரு முன்னுதாரணம்; காவலர்களின் இதயங்கள் எல்லாம் இரும்பு இல்லை. அவற்றில் ஒளிந்திருக்கிற கருணையையும், அன்பையும், இரக்கத்தையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி.ஆம். அது 'டெடிகேட்டட் பீட்' திட்டம் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. இந்த மாயாஜாலம் எப்படி நிகழ்ந்தது?மாநகரில் குற்றங்களைத் தடுக்கவும், குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் காவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கண்காணிப்பைப் பலப்படுத்த 'பீட்' முறையிலான ரோந்து இருந்தது. ஆனால் குறைபாடுகள் இருந்ததால், அது வெற்றிகரமானதாக அமையவில்லை.கடந்த ஆக., மாதம் காவல் ஆணையராக லட்சுமி பொறுப்பேற்றார். ஏற்கனவே உள்ள முறைகளில் இருந்த குறைகளைக் கண்டறிந்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து, நிறைகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய 'டெடிகேட்டட் பீட்' திட்டம், கடந்த மாதம் 27 முதல் அமலுக்கு வந்தது.ஏற்கனவே உள்ள புறநகர் காவல் நிலையங்கள் போக, கூடுதலாக சில இடங்களில் 'பீட்' திட்டத்துக்காக புறநகர் காவல் நிலையங்கள் உருவாகின.மொத்தம் 22 'பீட்' உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு 'பீட்'டுக்கும், தலா, இரு போலீசார் வீதம், 44 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுடன் தொடர்புகொள்ள பிரத்யேக அலைபேசி எண் தரப்பட்டது.இதில் காவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணிகள், சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வலம் வரும் காவலர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை புறநகர் காவல் நிலையத்தில் அமர்ந்து, மக்களின் புகார் மற்றும் குறைகளை கேட்பர்; வீடுகளில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களைச் சந்தித்து அவர்களது சூழலைப்புரிந்து உதவுவர்; பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இன்னும் பல சமூகப்பணிகளுக்கும் இவர்கள் கடமைப்பட்டவர்களாக இருப்பர்.-----------------------2கள ஆய்வு: கண்டறிந்த உண்மைகள்'டெடிகேட்டட் பீட்' திட்டச் செயல்பாடு குறித்து 'தினமலர்' நாளிதழ் சார்பில் நமது நிருபர் குழு கள ஆய்வு மேற்கொண்டது. திட்டத்துக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு.வழக்கமாக, பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறையைத்தான் தொடர்பு கொள்வர். தற்போது, கட்டுப்பாட்டு அறைக்கான அழைப்புகள் குறைந்து, காவலர்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்வது தெரியவந்தது.'பீட்' காவலர்களுக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ரோந்து மேற்கொண்டு கண்காணிக்கும் பணியே பிரதானமாக இருக்கிறது. இவர்களில் பலரும், அர்ப்பணிப்புணர்வுடன் பணிபுரிகின்றனர் என்பதை அறிய முடிந்தது.சொல் - செயல் வித்தியாசம்காவல்துறையில் வழக்கமாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும்போதெல்லாம், அவற்றின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முயலும்போது, சொல்லுக்கும், செயலுக்கும் பெருமளவு வித்தியாசம் இருக்கும்.திட்டத்தை உயரதிகாரிகள் கண்காணிக்காமல் விடுவதால், திட்டம் ஏதோ பெயரளவுக்கு மட்டும் செயல்படும்.தெள்ளத்தெளிவுடன் காவலர்கள்'டெடிகேடட் பீட்' திட்டத்தைத் துவங்கியுள்ள காவல் ஆணையர், நேரடிக் கண்காணிப்பைத் தொடர்வதோடு, அன்றாடம் இப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களிடம் தொடர்ந்து நேரடியாக விசாரித்து வருவதையும் அறிந்துகொள்ள முடிந்தது.இத்திட்டம் துவங்கிய ஒரு மாதத்திற்குள், மக்கள் மத்தியில் காவலர்களின் பிரத்யேக அலைபேசி எண் அதிகளவில் அறியப்பட்டிருக்கிறது. அந்தந்தப்பகுதி மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளனர்.ஆங்காங்கே நடைபெற்று வரும் சட்டவிரோதச் செயல்களில் ஆரம்பித்து, குற்றத்தடுப்பு நடமாட்டம், 'குட்கா' போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டம் மற்றும் விற்பனை, போதைப்பொருட்கள் பயன்பாட்டால் சமூகச் சீரழிவு, மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை தெள்ளத்தெளிவாக காவலர்கள் அறிந்துவைத்துள்ளனர்.----------------------3அன்றாடப் பிரச்னைகள்அன்றைக்கே அம்பலம்ஒவ்வொரு 'பீட்' காவலரும் தங்கள் பகுதியில் காலை அல்லது மாலை வேளைகளில் வீடுகளில் தனியாக இருக்கும் 'மூத்த குடிமக்கள்' விபரங்களைப் பெற்று, அவர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் அழைக்குமாறு தெரிவித்து வருகின்றனர். மூத்த குடிமக்களுக்கு நேரடியாக உதவுவதால் அவர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.'குடி'மகன்களின் களேபரம்ரோந்து செல்லும் காவலர்களிடம், 'மதுபோதையில் குடும்பத்தில் கணவர் அடிக்கிறார்; மகன் அடிக்கிறார்' என்று பெண்கள் பலர் கண்ணீர் வடித்தவாறு கூறுகின்றனர்.குடியிருப்பில் போதையில் 'குடி'மகன்கள் மேற்கொள்ளும் களேபரங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. குடும்பப்பிரச்னைகளும் அதிகளவில் கவனத்திற்கு வருகின்றன.குறிப்பாக, 'போதை' தகராறுகள், காவலர்களின் உடனுக்குடனான நடவடிக்கைகள் குறைந்துள்ளன. தம்பதியர் பிரச்னை, குடும்ப உறுப்பினர்களில் போதை நபர்களால் உருவாகும் பிரச்னைகளை மட்டுப்படுத்தவும் உதவிகரமாக காவலர்கள் இருக்கின்றனர். கூடுமான வரை குடும்பத்தலைவர்களுக்கு காவலர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.மக்கள் சந்திப்புக்கூட்டங்கள்'பீட்' காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வாரத்துக்கு, ஒன்று அல்லது இருமுறை மக்கள் சந்திப்புக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், பள்ளி, கல்லுாரிகளில் 'போக்சோ' உள்ளிட்ட சட்டங்கள், போதைப்பொருட்களின் தீமை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காலை, மாலை நேரங்களில் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் முன்பு கண்காணிப்பை மேற்கொள்கின்றனர்.பள்ளி அருகே உள்ள கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தென்பட்டால், உடனுக்குடன் நடவடிக்கை பாய்கிறது.அன்றாட பிரச்னைகள் அன்றைக்கே தெரியவந்துவிடுவதால், பிரச்னைகளைக் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது. எந்தப்பிரச்னையுமே முற்றிவிடும்போதுதானே சிக்கல்கள் நேரிடுகின்றன?------------------------4கருணை சுரந்த காவலர் மனசுகே.வி.ஆர்., நகர் பகுதியில் தகர 'ெஷட்' வீடு மாற்றுத்திறனாளி பெண் அமுதாவுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்டது. அமுதா கூறியதாவது:பிறவியில் மாற்றுதிறனாளியாக பிறந்து விட்டேன். தந்தை, அண்ணன் இருந்த வரை வாழ்க்கையை நடத்தி விட்டேன். வேலைக்கு தொடர்ந்து செல்ல இயலவில்லை. குடும்பத்தினர் இறப்புக்கு பின், உறவினர்கள் உதவியில்லாமல், தனியாக சாலையோரம் வசித்து வந்தேன். எனது நிலைமையை அறிந்து, காவலர் தங்குவதற்கு வீடு ஒன்றை ஏற்படுத்தி கொடுத்தார். மாற்றுத்திறனாளி நல உதவி பெறுதல் உள்ளிட்ட மேலும், சில உதவிகளை செய்ய முன் வந்தார். எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அமுதா கூறினார்.மூதாட்டிக்கு மின் கட்டணம்வீரபாண்டி பகுதியில், வீட்டில் தனியாக, 70 வயது மூதாட்டி வசித்து வந்தார். மின் கட்டணம் செலுத்தாததால் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மூதாட்டி 'பீட்' காவலரைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். காவலர், மின் கட்டணத்தொகையை செலுத்தி, மின் இணைப்பை மீண்டும் வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.------------5குற்றவாளிகள் தப்ப முடியாது'டெடிகேட்டட் பீட்', உடனுக்குடன் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் உதவுகிறது.வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தெற்கு ஸ்டேஷன் பகுதியில் அலைபேசி பறித்து தப்பித்த நபரை, காவலர்கள் பிடித்தனர். கோவை - பீளமேட்டில் இருந்து இருசக்கர வாகனத்தைத் திருடி கொண்டு, திருப்பூர் வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் ரோந்து மேற்கொண்ட போலீசார் பிடித்தனர்.பின்னலாடை நிறுவனம் ஒன்றில், நின்றிருந்த சரக்கு வாகனத்தை திருடி கொண்டு தப்பி வந்த போது, ரோந்து போலீசார் வாகன தணிக்கையின் போது கண்டறிந்ததும், வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த நபர் தப்பி சென்றார். வாகனத்தை காவலர்கள் மீட்டனர்.கனமழை பெய்த போது, அனுப்பர்பாளையம், வெங்கமேடு பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மின் ஒயர் குறித்து அறிந்து, உடனே சரி செய்தனர். காந்தி நகரில் மழை வெள்ளத்தில் கால்வாயில் அடித்து சென்ற நபரை மக்களுடன் சேர்ந்து, 'பீட்' காவலர்கள் மீட்டனர்.உயரதிகாரிகள் கண்காணிப்பு'பீட்' காவலர்கள் தங்கள் பணியில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதற்காக, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவர்களின் இருப்பிடம் கேட்டு பெறப்படுகிறது. அவர்களுக்கு வரக்கூடிய அழைப்புகள், அதற்கு தீர்வு போன்றவையும் கேட்கப்படுகிறது. அதை சோதிக்கும் வகையில், ஏதாவது ஒரு எண்ணுக்கு அழைத்து, காவலர்கள் வந்தார்களா என்பதையும் கேட்டு உயரதிகாரிகள் விசாரிக்கின்றனர். சந்திக்க வரும் மக்கள், புகார்கள் மற்றும் மூத்த குடிமக்கள் குறித்த தகவல்கள் என, மூன்று நோட்டுகளில் விபரங்களை பதிவு செய்கின்றனர். ஒவ்வொருவரும் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து மாதத்துக்கு, இரு முறை 'பீட்' காவலரின் செயல்பாடு, பணிகள் உள்ளிட்டவற்றை நேரடியாக ஆணையரே விசாரிக்கிறார். இதுதொடர்பான கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை ஆணையர் பாராட்டினார்.குற்றம் தடுப்பு சிறப்புதிருப்பூர் வடக்கு துணை ஆணையர் சுஜாதா கூறியதாவது:இத்திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ரோந்து மூலம் குடியிருப்பு பகுதிகளை முழுவதுமாக கண்காணிக்கின்றனர். திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட நபர்களையும் 'பீட்' காவலர்கள் கண்காணித்து பிடித்தனர். இது தவிர சமூக சேவைகளையும் செய்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.----கே.வி.ஆர்., நகர் பகுதியில், மரத்தடியில் வசித்துவந்த மாற்றுத்திறனாளி அமுதாவிடம், பிரச்னைகளைக் கேட்டறிகிறார் இன்ஸ்பெக்டர்அமுதாவுக்கு கட்டித்தரப்பட்ட 'தகர ெஷட்' வீடு.கே.வி.ஆர்., நகர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்காக மண்வெட்டியுடன் களத்தில் காவலர் பிரசாந்த்.மத்திய பஸ் ஸ்டாண்டில் கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்.கடையில் புகையிலைப்பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்யும் காவலர்.இடம்: பல்லடம் ரோடு, பாரதி நகர்.பள்ளி நேரங்களில் கண்காணிப்பு பணியில் காவலர்.இடம்: வித்யாலயா, சுண்டேமேடு ரோடு.காவலரிடம் குறையைத் தெரிவிக்கும் மூதாட்டி.இடம்: சூசையாபுரம்.

கூடுதல் காவலர் நியமித்தால்

திட்டம் மேலும் சிறப்புறும்'பீட்' காவலர் திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால், இன்னமும் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம். 44 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். கூடுதலாக போலீசாரை நியமித்தால், ரோந்து மேற்கொள்பவர்களுக்கு கூடுதல் ஓய்வு நேரம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட புறநகர் காவல் நிலையங்களில் எப்போதும் ஒரு காவலர் இருக்க முடியும். மக்கள் போனில் தொடர்பு கொண்டாலும், நேரில் வருபவர்களுக்கு பதில் அளிக்க, விசாரிக்க உதவியாக இருக்கும்.100க்கு அழைப்பு50 சதவீதம் குறைந்தது---------------------'டெடடிகேட்டடு பீட்' திட்டம் எந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டதோ, அது சிறப்பாக நிறைவேறி வருகிறது. மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதற்கு முன்பு கட்டுப்பாட்டு அறைக்கு, நுாறுக்கு வரக்கூடிய அழைப்புகள், 50 சதவீதம் குறைந்து விட்டது. நேரடியாக அந்தந்த 'பீட்' காவலர்களை மக்கள் அழைக்கின்றனர். பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'பீட்' காவலர்கள் குறித்து மக்களுக்கு தெரிந்துள்ளது. மக்களுடன் பரிச்சயமானவர்களாக மாறி விட்டனர். மூத்த குடிமக்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. வாரத்துக்கு ஒரு முறையாவது சந்தித்து விடுகின்றனர். காவலர்கள் சந்திப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தந்த பகுதியில் மூத்த குடிமகன்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கின்றனர்.- லட்சுமி, காவல் ஆணையர், திருப்பூர் மாநகரம்.-------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ