திருப்பூர் : நில அபகரிப்பு செய்ததாக தி.மு.க.,வினர் மீது வழக்கு போடும் அ.தி.மு.க., அரசை கண்டித்து, திருப்பூர் மாவட்ட தி.மு.க., சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தி.மு.க., மாவட்ட செயலாளர் சாமிநாதன் பேசுகையில், ''அ.தி. மு.க., அரசு பொறுப்பேற்ற பின், தி.மு.க.,வை பழிவாங்கும் நோக்கத்தில், நில அபகரிப்பு செய்ததாக பொய் வழக்குகளை போட்டு வருகிறது. தி.மு.க., நிர்வாகிகளை கைது செய்வதன் மூலம் கட்சியை முடக்கப் பார்க்கிறது. இத்தகைய தடைகளை தாண்டி, தி.மு.க., என்றென்றும் மக்கள் பணியாற்றும். அ.தி.மு.க., அரசின் அராஜகத்துக்கும், அடக்குமுறைக்கும் தி.மு.க., அஞ்சாது. ஜனநாயகத்தின் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடும்,'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க.,வினர் திரண்டு வந்திருந்தனர்; ஒரு மணி நேரத்துக்கு மேலாக, கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. 40 பெண்கள் உட்பட 1,600 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள், காமாட்சியம்மன், காவேரியம்மன், குஜராத்தி திருமண மண்டபம், ராமசாமி முத்தம்மாள் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மதியம் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. மதியம் 2.00 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில், மூன்று டி.எஸ்.பி.,கள், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ.,க்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.