உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுலா மேம்பாடு; கானல் நீராகலாமா? முக்கியத்துவம் அளிக்க எதிர்பார்ப்பு

சுற்றுலா மேம்பாடு; கானல் நீராகலாமா? முக்கியத்துவம் அளிக்க எதிர்பார்ப்பு

சுற்றுலா முக்கியத்துவம் பெறும் நகராக திருப்பூர் மாவட்டத்தையும் மாற்ற வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இரண்டு, மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்றால் பொதுமக்கள் பலர், சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். தீபாவளி தொடர் விடுமுறையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் சுற்றுலா சென்றவர்கள் அதிகம்.திருப்பூர் வாசிகளின் முதல் தேர்வாக அமைவது ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு. ஒரே நாள் இரவில் திரும்ப வேண்டும் என்றால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை, கொடிவேரி, கோவை மாவட்டம் வால்பாறை, ஆழியார் அணை.குளிர்பிரதேசத்தை தவிர்த்து, கடற்கரையை ரசிக்க வேண்டுமென நினைப்பவர்கள், கேரள மாநிலம் மலம்புழா, கொச்சி, திருச்சூர் பயணிக்கின்றனர்.

அறிவிப்பு போதுமா?

திருப்பூர், எஸ்.பெரியபாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வரை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் காகித அளவில் உள்ளது.'படகுகள் வந்து விட்டன; இனி சவாரி துவங்குவது தான் பாக்கி' என அறிவிப்புகள் வெளியாயின; ஆனால், திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளத்தில் தற்போது வரை படகு சவாரி துவங்கி, செயல்பாட்டுக்கு வரவில்லை.

முதலைப்பண்ணை

மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டி குளுகுளு வானிலையுடன் இருக்கும் பகுதி, சின்னாறு, மறையூர் வனப்பகுதி. இங்கு பல மாவட்ட சுற்றுலா பயணியர் வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக, அமராவதி முதலைப்பண்ணை உள்ளது. அமராவதி அணைக்கட்டு அருகே உள்ள இங்கு பெரும்பாலும் சுற்றுலா பயணியர் செல்வதில்லை. பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் விரிவான வழிகாட்டுதல் இல்லாதது தான் இதற்கு முதன்மையான காரணம்.

பஸ் இயக்கம் குறைவு

திருமூர்த்திமலையை அடுத்துள்ளது, பஞ்சலிங்க அருவி. அமணலிங்கேஸ்வரர் கோவில். மாவட்டத்தில் அதிகமான சுற்றுலா பயணியர் வந்து செல்லும் இடமாக இக்கோவில், அருவி உள்ளது.ஆனால், உடுமலை தவிர மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்து போதிய, நேரடி பஸ் இயக்கம் இல்லாததால், பெரும்பாலானோர், கார், டூவீலர்களில் சென்று வருகின்றனர்.மாவட்டத்தில், அமராவதி, உப்பாறு, திருமூர்த்தி ஆகிய மூன்று அணைகள் உள்ள போதும், அதிகமானோர் திருமூர்த்தி அணைக்கு பயணிக்கின்றனர்.அமராவதி அணையில் அழகிய பூங்கா, அணைக்கட்டின் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பார்த்தால் இயற்கை காட்சி, ஆனைமலை குன்று, பழநி மலையையும் காணலாம். ஆனால், போதிய பஸ் வசதி இல்லாததால், இங்கு சுற்றுலா பயணியர் குறைந்தளவே செல்கின்றனர். உப்பாறு அணைக்கும் சுற்றுலா பயணியர் செல்வதில்லை.சுற்றுலா முக்கியத்துவம் பெறும் நகராக திருப்பூர் மாவட்டத்தையும் மாற்ற வேண்டியது அவசியம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ