தென்னம்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர்; தென்னம்பாளையம் மார்க்கெட் முன் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை செயல்படுவதால், தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், நாள் முழுவதும் வாகன நெரிசல் காணப்படும். காலை நேரம், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கலெக்டர் அலுவலகம் செல்லும் வாகனங்கள் உட்பட, பல்லடம் ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையை மாற்றும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வெள்ளியங்காடு, முத்தையன்கோவில் வழியாக வரும் வாகனங்கள் வழக்கம் போல், பல்லடம் ரோடு மார்க்கெட் சந்திப்பு பகுதிக்கு செல்ல முடியாது. முத்தையன் கோவில் வழியாக வரும் வாகனங்கள், பல்லடம் ரோட்டில் செல்ல, இடதுபுறமாக திரும்பி ரேஷன் கடை, தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி ரோட்டில் செல்ல வேண்டும்.மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே செல்ல வேண்டிய வாகனங்கள், தென்னம் பாளையத்தில் இருந்து வலது புறமாக காமாட்சியம்மன் கோவில் ரோட்டில் திரும்ப வேண்டும்;கோவிலில் இருந்து, இடதுபுறமாக திரும்பி, பல்லடம் ரோட்டை அடையலாம்; வலதுபுறமாக திரும்பினால், ெஷரீப் காலனி ரோட்டை அடைந்து, தாராபுரம் ரோட்டுக்கு எளிதாக செல்லலாம். தென்னம்பாளையம் மார்க்கெட் சந்திப்பு பகுதியில் அதிகப்படியான வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, போலீசார், போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.