கன்டெய்னர் லாரிகள் சாகசத்தால் போக்குவரத்து நெரிசல்!
பல்லடம்: பல்லடம் பகுதியில் உள்ள தேசிய - மாநில நெடுஞ்சாலைகள் சரக்கு போக்குவரத்துக்கு பிரதான வழித்தடமாக உள்ளன. இவ்வழியாக, தினமும் நுாற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. நேற்று, ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்தது. பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன், தேசிய நெடுஞ்சாலையில், திடீரென 'யு டர்ன்' எடுக்க முயன்றது. ரோட்டின் இருபுறமும் இருந்து வாகனங்கள் அணிவகுத்துவர, கன்டெய்னர் லாரியால் திரும்ப முடியவில்லை. மற்றொருபுறம், பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வந்த பஸ்களும் செல்ல முடியாமல் நின்றன. நீண்ட நேரத்துக்கு பின், திணறியபடி கன்டெய்னர் லாரி 'யு டர்ன்' எடுத்து சென்றது. இதனால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, கொச்சி செல்லும் நெடுஞ் சாலை, முத்தாண்டிபாளையம் பிரிவு அருகே திரும்ப முயன்றது. குறுகலான பாதை என்பதால் திரும்ப முடியாமல் தத்தளித்தது. இதற்குள், நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்துவர, நீண்டநேர போராட்டத்துக்கு பின், கன்டெய்னர் திரும்பிச் சென்றது. இதனால், கொச்சி ரோட்டில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பல்லடம் நகரப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு உள்ளது. ஆனால், பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், அனைத்து நேரங்களிலும் நகரப் பகுதிக்குள் நுழைவதால், பல்லடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நிறைந்த நேரங்களில், கனரக வாகனங்கள் நகர பகுதிக்குள் நுழைவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.