சுரங்கப்பாதை பணி; போக்குவரத்து மாற்றம்
திருப்பூர்: திருப்பூர் பார்க் ரோட்டில் சுரங்கபாதை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, மாநகரில் வரும் 1 ம் தேதி முதல் போக்குவரத்தை மாற்றத்தை போலீசார் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, அவிநாசி ரோட்டிலிருந்து குமரன் ரோடு வழியாக மாநகராட்சி சந்திப்பு மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்ட் செல்லும் கனரக வாகனங்கள் பார்க் ரோடு சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி சாய்பாபா கோவில் ரோடு வழியாக யுனிவர்சல் தியேட்டர் சந்திப்பை அடைந்து வலது புறம் திரும்பி வளம் ரோடு வழியாக பார்க் ரோடு சந்திப்பை அடைந்து இடது புறம் திரும்பி மாநகராட்சி சந்திப்பை நோக்கி செல்லலாம். அவிநாசி ரோட்டிலிருந்து குமரன் ரோடு வழியாக மாநகராட்சி சந்திப்பு மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்ட் செல்லும் இலகு ரக மற்றும் டூவீலர் வாகனங்கள் பார்க் ரோடு சந்திப்பிலிருந்து, வலது புறம் திரும்பி பூங்கா ரோடு வழியாக, கிரிஸ்டல் சந்திப்பை அடைந்து, இடது புறம் திரும்பி நடராஜ் தியேட்டர் எதிரில், புதிய பாலம் வழியாக நொய்யல் ஆற்றின் கரையில் புதிதாக அமைக்கப்பட்ட தெற்கு கரை ரோடு வழியாக எஸ்.ஏ.பி., ரெசிடன்சி அடைந்து, வலது புறம் திரும்பி, மாநகராட்சி சந்திப்பு வழியாக, மத்திய பஸ் ஸ்டாண்டை அடையலாம். மேலும், குமரன் ரோட்டிலிருந்து மங்கலம் நோக்கி செல்லும் இலகு ரக மற்றும் டூவீலர் பார்க் ரோடு சந்திப்பிலிருந்து, பார்க் ரோடு வழியாக கிரிஸ்டல் சந்திப்பை அடைந்து, இடதுபுறம் திரும்பி நடராஜ் தியேட்டர் எதிரில் உள்ள புதிய பாலம் வழியாக எஸ்.ஏ.பி., ரெசிடன்சி அடைந்து, வலது புறம் திரும்பி மாநகராட்சி சந்திப்பு வலது புறம் திரும்பி தாடிக்கார முக்கு சந்திப்பை அடைந்து மங்கலம் செல்லலாம். மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து மங்கலம் செல்லும் வாகனங்கள் மாநகராட்சி சந்திப்பிலிருந்து தாடிகார முக்கு வழியாக செல்லலாம். அவிநாசி மற்றும் ஊத்துக்குளி செல்லும் வாகனங்கள் மாநகராட்சி சந்திப்பிலிருந்து டைமண்ட் தியேட்டர் வழியாக நடராஜ் தியேட்டர் சந்திப்பை அடைந்து, அங்கிருந்து வலது புறம் திரும்பி அவிநாசி மற்றும் ஊத்துக்குளி செல்லலாம். ஊத்துக்குளி ரோட்டிலிருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள் தேவைக்கேற்ப ஊத்துக்குளி ரோடு ரிலையன்ஸ் கட் ரோடு அல்லது 2வது ரயில்வே கேட் வழியாக, செல்லாண்டியம்மன் கோவில் சந்திப்பை அடைந்து எம்.ஜி.பி., வழியாக, மத்திய பஸ் ஸ்டாண்ட் செல்லலாம். மாநகராட்சி சந்திப்பிலிருந்து பார்க் ரோடு சந்திப்பு வரை, ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் கருத்து சொல்லலாம் இப்போக்குவரத்து மாற்றம் தற்காலிகமாக, இரண்டு நாட்கள் ஒத்திகை நடக்கும். போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு, திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில் கேட்டுகொள்ளப்படுகிறது. போக்குவரத்து மாற்றம் மேம்படுத்துதலில், பொதுமக்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், 94981-81078 எண்ணுக்கு தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்குமாறு மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.