பப்பாளி ஆலையில் விபத்து விஷவாயு தாக்கி 2 பேர் பலி
உடுமலை:உடுமலை அருகே பப்பாளி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் விஷ வாயு தாக்கி இருவர் பலியாகினர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை பூலாங்கிணர், சடையபாளையத்தில், செயின்ட் ஜோசப் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலையில், பப்பாளி காய்களை பதப்படுத்தி, உணவு பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், 'டூட்டி புரூட்டி' தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு, உப்பு நீரில் பப்பாளி காய்களை, 10 நாட்கள் ஊற வைத்து, பின் இயந்திரத்தில் சிறிய துண்டுகளாக மாற்றி, ஊற வைத்து, பதப்படுத்தப்படுகிறது. துண்டுகள் ஊற வைத்து பதப்படுத்திய பின், இயந்திரங்கள் வாயிலாக வெளியேற்றுவதற்காக, 10 அடி ஆழம் உள்ள தொட்டியில், நேற்று காலை, 11:30 மணியளவில், ஒடிசா மாநிலம், தில்லாங்கூர் பகுதியைச் சேர்ந்த ரோகித் டிகால், 25, அருண்கோமாங்கோ, 25, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, எதிர்பாரதவிதமாக விஷ வாயு தாக்கி, அருண்கோமாங்கோ தொட்டியில் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்த, ரோகித் டிகாலும், தொட்டியில் விழுந்தார். இருவரும் பலியாகினர். உடுமலை தீயணைப்பு துறையினர், இருவரது சடலத்தையும் மீட்டனர். உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.