தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்பார்ப்பு
திருப்பூர் : 'தெரு நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு, அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்' என, கால்நடைகளை பறிகொடுத்தோர் கூறுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடுகளை, தெரு நாய்கள் கடிப்பதால், ஆடுகள் பலியாகின்றன.அந்த வகையில், இதுவரை , நுாற்றுக்கணக்கில் ஆடுகள் பலியாகியிருக்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர். இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழையும் கால்நடைகளை பறிகொடுத்தோர் வாங்கி வைத்துள்ளனர்.'இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களையும் விவசாய அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தெரு நாய்கள் கடித்து பலியான ஆடுகளின் உரிமையாளர்கள் சிலருக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அந்த மாவட்ட அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியே நடந்தது. இது, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.வெள்ளகோவில் பி.ஏ.பி., பாசன கிளைக் கால்வாய் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது: மாவட்டம் முழுக்க, 2,000க்கும் மேற்பட்ட ஆடுகள், தெரு நாய்கள் கடித்து பலியாகியிருக்கிறது. ஆடுகளை இறந்தவர்களுக்கு ஈரோடு தி.மு.க.,வின் கட்சி நிதியில் இருந்து நிவாரணம் வழங்கியுள்ளனர். தினம்தினம் ஆடுகளை பறி கொடுப்போருக்கு கட்சி சார்பில் நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.மாறாக, அரசின் சார்பில் கொள்கை முடிவெடுத்து, இறந்த ஆடுகளுக்கு இழுப்பீடு வழங்கப்பட வேண்டும்; இதுதான், சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். அப்படி செய்யும் போது தான், அரசுக்கு செலவினம் ஏற்படும்.இந்த செலவினத்தை குறைக்க தெரு நாய்களை கட்டுப்படுதுவது மட் டுமே வழி, என்ற நிலைக்கு அரசு வரும். இச்சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.