திருப்பூர்:வாக்காளர் அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்று, தவறாமல் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா மிளிர்கிறது. நம் நாடு தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க, ஆட்சி அதிகாரம் நல்லவர்களிடம் இருக்கவேண்டியது அவசியமாகிறது.நம்மை யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதை முடிவு செய்யும் வாக்குரிமை என்கிற மிகப்பெரிய ஆயுதம், வாக்காளர் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. லோக்சபா தேர்தல் திருவிழாவில் மிக முக்கிய நிகழ்வான ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில், 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர் உள்ளனர்.வாக்காளர் ஒவ்வொருவரும் இந்த திருவிழாவில் பங்கெடுத்து, தவறாமல் ஓட்டுப்பதிவு செய்யவேண்டும். வாக்காளர்கள், பூத்சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எடுத்துச்சென்று ஓட்டுப்பதிவு செய்யலாம்.வாக்காளர் அட்டை இல்லாதோர், ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பேங்க் பாஸ்புக் அல்லது தபால் கணக்கு புத்தகம், ஓய்வூதிய ஆவணம், ஊரக வேலை உறுதி திட்ட பணி அட்டை, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தில் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டை, மக்கள் தொகை கணக்கீட்டின்படி வழங்கிய ஸ்மார்ட் கார்டு.மாநில அரசின் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஓட்டளிக்கலாம்.பூத் சிலிப் கிடக்காத வாக்காளர்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை தெரிவித்து, பூத்சிலிப் பெற்றுக்கொள்ளலாம். வரிசை எண், பாகம் எண் ஆகியவற்றை பேப்பரில் குறித்து எடுத்துச்செலலாம்.ஓட்டளிப்பதுஇப்படித்தான்?வாக்காளர், ஓட்டுச்சாவடிக்குள் சென்று, முதலில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் - 1 யிடம் உரிய அடையாள அட்டையை வழங்கவேண்டும். அவர், தன்னிடமுள்ள வாக்காளர் படிவத்தில், பெயர் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்வார்.அடுத்ததாக ஓட்டுப்பதிவு அலுவலர் -2, வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைத்து, வாக்காளர் பதிவேட்டில் கையெழுத்து பெறுவார்; ஓட்டு ஸ்லிப் வழங்குவார். ஓட்டுப்பதிவு அலுவலர் 3 யிடம், ஓட்டு சிலிப்பை வழங்கவேண்டும். அவர், கன்ட்ரோல் யூனிட்டில் பட்டனை அழுத்தி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை தயார்படுத்துவார்.வாக்காளர், அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மறைவிடத்துக்கு சென்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தான் விரும்பும் வேட்பாளரின் சின்னம் அருகே உள்ள நீல நிற பட்டனை அழுத்தவேண்டும்; 'பீப்' ஒலி கேட்கும்.அருகிலுள்ள விவி., பேடில், ஏழு நொடி தோன்றும் துண்டுச்சீட்டில், பதிவு செய்யப்பட்ட சின்னத்தை பார்த்து, குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுப்பதிவானதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிக்குஅனைத்து வசதி!மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளது; சாய்தள பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை அழைத்து வருவதற்காக, தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு துல்லியமாக ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி ஷீட் ஒட்டப்பட்டுள்ளது.தேர்தல் நாளான இன்று, அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாள், பொழுது போக்குவதற்கான விடுமுறை அல்ல, நாட்டில் தலையெழுத்தை நிர்ணயிப்பதற்காக என்பதை உணர்ந்து, அனைவரும் ஓட்டுச்சாவடி நோக்கி, வாக்காளர்களாகிய உங்கள் கால்கள் நடைபோட வேண்டும்.இன்றைய நாள், பொழுது போக்குவதற்காக அல்ல; நம் நாட்டில் தலையெழுத்தை நிர்ணயிப்பதற்காக நாள் என்பதை உணர்ந்து, அனைவரும் ஓட்டுச்சாவடி நோக்கி, நடைபோட வேண்டும்.