தொழில்முனைவோர் மாநாடு வாயிலாக கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்போம்
திருப்பூர்: தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் முத்துரத்தினம் அறிக்கை:ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. தொழில் அமைப்புகளும், நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். தொழிலை பாதுகாக்கவும், அரசிடம் இருந்து தேவையான உதவிகளை பெறவும் போராட வேண்டியுள்ளது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு அரசு செவி சாய்க்கிறது. தமிழகத்தில் முதுகெலும்பாக விளங்கும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றன. இருப்பினும், இத்தொழில் முனைவோரின் கோரிக்கையை அரசு கண்டுகொள்வதில்லை.அனைத்து அமைப்புகளும், நவ., மாதம் கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர்கள் மாநாட்டில் பங்கேற்று, அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். வரும் காலங்களில், நமது கோரிக்கையை அரசிடம் கொண்டு சேர்க்கும் வகையில் போராட வேண்டும். கோவையில் நடக்கும் மாநாட்டின் வாயிலாக, நமது கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவோம். ஒன்றுபடுவோம்; தொழிலை வென்றெடுப்போம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.