உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாங்களே குழாய்களை அகற்றுவோம்! அதிகாரிகளிடம் விவசாயிகள் காட்டம்

நாங்களே குழாய்களை அகற்றுவோம்! அதிகாரிகளிடம் விவசாயிகள் காட்டம்

பல்லடம்; பல்லடத்தில், எரிவாயு குழாய் பதிப்பதில் இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பல்லடம் தாசில்தார் சபரி தலைமை வகித்தார். பல்லடம், நாரணாபுரம், சுக்கம்பாளையம், கணபதிபாளையம், மாணிக்காபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: கோவை, இருகூர் முதல் கர்நாடக மாநிலம், தேவனஹள்ளி வரை பல கி.மீ., துாரத்துக்கு சாலை மார்க்கமாக எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு மட்டும் விளைநிலங்கள் வழியாகவே குழாய் பதிக்க அடம் பிடிப்பது ஏன்? எங்களது முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதித்து விட்டனர். ஆனால், நூறு சதவீதம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆரம்பம் முதலே விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், அதிகாரிகள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து அளவீடு பணி மேற்கொள்கின்றனர். கடந்த, 300 நாட்களுக்கு மேலாக நாங்கள் போராடிவரும் நிலையில் இதுவரை ஏன் என்று கூட யாரும் கேட்க முன் வரவில்லை. ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றிவிடுங்கள். எங்களுக்கு இழப்பீடும் வேண்டாம்; குழாய் பதிக்கவும் வேண்டாம். போலீசாரை வைத்து எங்களை அடிபணிய வைக்க முயற்சிக்க வேண்டாம். எங்களது நிலத்தை எங்களுக்கு பத்திரமாக கொடுத்தால் போதும். ஒரு காலகட்டத்தை நிர்ணயம் செய்து, பழைய குழாய்களை எவ்வளவு விரைவாக அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக அகற்ற உத்தரவிடுங்கள். இல்லாவிடில், நாங்களே குழாய்களை அகற்றவும் தயங்க மாட்டோம். அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களை அடுத்தகட்ட போராட்டத்துக்கு துாண்ட வேண்டாம். எனவே, பழைய எரிவாயு குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும். புதிய குழாய்களை விளை நிலங்கள் வழியாக பதிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு அறிந்த தாசில்தார் சபரி, இதையே கருத்துக்களாக ஏற்றுக்கொண்டு அறிக்கை அனுப்பப்படும் என்றார். தொடர்ந்து, விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், கூட்டம் நடந்த அரங்கினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை