அரசு திட்டங்கள் நிலை என்ன? கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருப்பூர்; உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் நேற்று ஆய்வு நடத்தினார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அரசு திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் மனீஷ் நாரணவரே முன்னிலை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் அமித், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கனர் சங்கமித்திரை உள்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் நடைபெற்றுவரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில், 325 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை நடைபெற்ற முகாம்களின் விவரம், முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் விவரம், துறைவாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நலம்காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், சிறப்பு மருத்துவ சேவைகள், புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து, தினந்தோறும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தவேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, பரிசீலனை செய்து, விரைந்து தீர்வு காணப்படவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.