இடியும் நிலையில் பால தடுப்புச்சுவர் நடவடிக்கை எடுப்பது எப்போது?
உடுமலை; அமராவதி ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் இடியும் நிலைக்கு மாறியும், நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.கோவை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே, 1984ல், மேம்பாலம் கட்டப்பட்டது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலம் முறையாக பராமரிக்கப்பட வில்லை.கனரக வாகனங்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால், பாலத்தின் ஓடுதளத்தில் விரிசல், அதிர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த, 2015ல், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 76.92 லட்சம் ரூபாய் செலவில், புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதன்பின், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், குறிப்பிட்ட இடைவெளியில், போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. ஓடுதளத்தில், ஆங்காங்கே குழிகள் உருவாகியுள்ளது.குறிப்பாக நடைபாதை ஒட்டி அமைந்துள்ள தடுப்புச்சுவர், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுவரில் மரங்கள் முளைத்து பாலத்தின் உறுதித்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத அவலம், தொடர்கதையாக உள்ளது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அமராவதி ஆற்றுப்பாலத்தை, உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலமுறை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.