உழவர் சந்தை அமைவது எப்போது? மடத்துக்குளம் மக்கள் எதிர்பார்ப்பு
உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில், உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.மடத்துக்குளம் வட்டாரத்தில், அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசனம், பி.ஏ.பி., பாசனம் மற்றும் கிணற்று பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில், சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, காய்கறிகளும், பரவலாக அனைத்து சீசன்களிலும், உற்பத்தியாகிறது. அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருளை சந்தைப்படுத்த, உடுமலை தினசரி சந்தை, உழவர் சந்தை உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து, விளைபொருட்களை உடுமலைக்கு எடுத்து வர விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.மடத்துக்குளம், கொழுமம் உள்ளிட்ட பகுதிகளில், உள்ள சந்தைகள் போதிய வசதிகள் இல்லாமல், செயல்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகளும், காய்கறி வாங்க வரும், மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அரசின் உழவர் சந்தையை மடத்துக்குளம் தாலுகாவில் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: மடத்துக்குளத்தை தலைமையிடமாக கொண்டு சட்டசபை தொகுதி, தாலுகா உருவாக்கப்பட்ட போதும், எவ்வித மேம்பாட்டு திட்டங்களும் வரவில்லை.விவசாயிகள், பொதுமக்கள் என இரு தரப்பினரும், பயன்பெறும் வகையில் மடத்துக்குளத்தில், உழவர் சந்தை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.காய்கறி சாகுபடி பரப்பு அதிகமாக உள்ள பகுதியை தேர்வு செய்து, சந்தையை துவக்க வேண்டும். சந்தை இல்லாததால் விளைபொருட்களை சந்தைப்படுத்த திணற வேண்டியுள்ளது. இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல், உள்ளனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.