கதிர்களை காலி செய்யும் காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் கண்ணீர்
உடுமலை; உடுமலை அருகே, காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, வனத்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு புதுப்பாளையம், ராமச்சந்திராபுரம் கிளை கால்வாய் பாசன பகுதியில், 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.இச்சாகுபடியில், பயிர்களில் கதிர்கள் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. பயிர்களில் பூ விட்டு கதிர் பிடிக்கும் தருணத்தில் இருந்து, காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது.இப்பிரச்னையை கட்டுப்படுத்த, வரப்புகளில் வண்ணச்சேலை கட்டுதல்; மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். இரவு நேரங்களில் காவல் இருந்து பட்டாசு வெடித்தனர். இருப்பினும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அடிவள்ளி, விருகல்பட்டி, வல்லக்குண்டாபுரம், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், கொங்கல்நகரம், அம்மாபட்டி, சனுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், தற்போது அறுவடைக்கு தயாராகி வரும் மக்காச்சோள கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.பயிர்களை கீழே சாய்த்து கதிர்களை உண்கிறது; கூட்டமாக வருவதால் பயிர்கள் ஒடிந்து விழுந்து விடுகின்றன.குடிமங்கலம் வட்டாரத்தில் மட்டும், 20 கி.மீ., சுற்றளவுக்கு காட்டுப்பன்றிகளால், அனைத்து சாகுபடியும் பாதித்து விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. ஆனால், இதுவரை வனத்துறையினர் நேரடியாக வந்து ஆய்வு செய்யவில்லை.விவசாயிகள் கூறியதாவது : மக்காச்சோள சாகுபடியில் ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளோம். ஆனால், காட்டுப்பன்றிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்காச்சோள கதிர்களை சேதப்படுத்தி வருகிறது.பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. விளைந்த கதிர்கள் வீணாவது வேதனையளிக்கிறது. பல முறை புகார் தெரிவித்தும், வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் சாகுபடியிலும், நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளோம். தமிழக அரசு வனத்துறை வாயிலாக நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.