உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர்களை சூறையாடும் காட்டுப்பன்றிகள்; வனத்துறை அலட்சியத்தால் அதிருப்தி

பயிர்களை சூறையாடும் காட்டுப்பன்றிகள்; வனத்துறை அலட்சியத்தால் அதிருப்தி

உடுமலை : உடுமலை பகுதிகளில், காட்டுப்பன்றிகள் பல்கி பெருகியுள்ள நிலையில், விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னை, வாழை, நெல், கரும்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி என விவசாயம் பிரதானமாக உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள கிராமங்களில் மட்டும் காணப்பட்ட காட்டுப்பன்றிகள், தற்போது, 40 முதல், 60 கி.மீ., துாரம் வரை அமைந்துள்ள கிராமங்களிலும் தற்போது, காட்டுப்பன்றிகள் இருப்பிடமாக மாற்றியுள்ளன.ஓடைகள், நீர் வழித்தடங்களில் அமைந்துள்ள முட்காடுகள், விவசாய நிலங்களிலுள்ள வேலிகளில் தங்கி, இனப்பெருக்கம் செய்து, தொடர்ந்து அவற்றின் எண்ணிக்கை பல்கி பெருகி வருகிறது.ஒவ்வொரு கிராமங்களிலும், இவ்வாறு காணப்படும் நுாற்றுக்கணக்கான பன்றிகள், விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மக்காச்சோளம், நெல், கரும்பு, காய்கறி பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு, ஒட்டுமொத்த விவசாயத்தையும் கேள்விக்குறியாக்கி வருகின்றன.இவற்றை தடுக்க, வண்ண சேலைகள் கட்டுவது, ஒலி எழுப்பும் அமைப்புகள் என விவசாயிகள் கூடுதல் செலவு செய்தாலும், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வனத்துறையினரும், அதிகாரிகளும் காட்டுப்பன்றிகள் குறித்து கணக்கெடுப்பு, மற்ற மாவட்டங்களில் உள்ளது போல், வன விலங்கு பட்டியலிருந்து நீக்க நடவடிக்கை, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.ஆனால், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தொடர்ந்து விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.கடத்துார் பகுதியில், காட்டுப்பன்றிகளால் நடவு செய்யப்பட்டிருந்த பல நுாறு ஏக்கர் நெற்பயிர்கள் அழிந்துள்ளன.இதே போல், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், மக்காச்சோளம், தென்னை, கரும்பு, காய்கறி பயிர்கள் என பல ஆயிரம் ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.எனவே, வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.விவசாயிகள் கூறியதாவது:காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கூட்டம், கூட்டமாக சுற்றி வருவதால், மனிதர்கள், கால்நடைகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.அதிலும், குட்டிகளுடன் காணப்படும் காட்டுப்பன்றிகள், பெரும் ஆபத்தை விளைவித்து வருகின்றன.ஆண்டு தோறும், காட்டுப்பன்றிகளால், பயிர்கள் பெரும் சேதமடைந்தாலும், வனத்துறையில் புகார் தெரிவித்தாலும், உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை.எனவே, வன விலங்குகள் பட்டியலிருந்து நீக்கி, அவற்றை கட்டுப்படுத்த அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ