உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமங்களில் இ-சேவை மைய கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வருமா? கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இழுபறி

கிராமங்களில் இ-சேவை மைய கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வருமா? கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இழுபறி

உடுமலை: ஊராட்சிகளிலுள்ள, கிராம சேவை மையங்களில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மூன்று ஒன்றியங்களை சேர்ந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. இக்கிராம மக்கள் பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க, உடுமலை வர வேண்டியுள்ளது. கிராமப்புற மக்களுக்கான இ-சேவையை அதிகரிக்க, மத்திய அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கிராமந்தோறும், கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த மையத்தில், அரசுத்துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கான சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ரூ.14 லட்சம் ஒதுக்கீடு சேவை மைய கட்டடத்துக்கு, வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தலா, 14 லட்சம் ரூபாய், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கட்டட பணிகள் நிறைவு பெற்று பல ஆண்டுகளாகியும், கிராம சேவை மையங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. கம்ப்யூட்டர் உட்பட உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யாதது; ஆட்கள் நியமனம் உட்பட பிரச்னைகளால், கிராம சேவை மையங்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் கிராம அரசு அலுவலகங்களுக்கு, தடையற்ற இன்டர்நெட் கிடைக்க, 'பைபர் நெட்' இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இ-சேவை மையங்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர, கம்ப்யூட்டர் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் கொண்டு வரப்படவில்லை. இதனால், பல இ-சேவை மைய கட்டடங்கள் காட்சிப்பொருளாக மாறி, சமூகவிரோத செயல்கள் மையமாகியுள்ளது. பிற ஊராட்சிகளில், அக்கட்டடங்கள் ஊராட்சி அலுவலகம், பொருட்கள் இருப்பு வைக்கும் அறை என, பிற தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். கிராமங்களில் இ-சேவை எளிதாக கிடைக்க கொண்டு வரப்பட்ட இத்திட்டம், முழுமை பெறாமல் நீண்ட காலமாக இழுபறியாக உள்ளது. திட்டத்தின் நோக்கம் வீணாகும் வகையில், இ-சேவை மைய கட்டடங்கள் காணப்படுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள கட்டடங்களை, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக புதுப்பிக்க வேண்டும். கிராம மக்கள் பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கவும், ஆன்லைன் சார்ந்த சேவைகளை பெறவும், உடுமலைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. அங்குள்ள மையங்களில் அதிக கூட்டம் உள்ளிட்ட காரணங்களால் மிகுந்த சிரமப்படுகின்றனர். குறிப்பாக, மாணவ, மாணவியர் ஆதார் திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்காக அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. அதிவேக இன்டர்நெட் சேவை கிராமங்களுக்கு கிடைத்துள்ள நிலையில், தமிழக அரசு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், கிராம இ-சேவை மையங்களில் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை