தினமலர் செய்தி எதிரொலி; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படுத்த வல்லுநர் குழு!
உடுமலை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படுத்துவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். தினமலர் செய்தி எதிரொலியாக, உடுமலையில் நடந்த அரசு விழாவில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960ல் துவக்கப்பட்டது. இந்த ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18,500 விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.ஆண்டுக்கு, 10 மாதங்கள் இயங்கி, 4.5 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது. இங்குள்ள இயந்திரங்கள் நிறுவி, 64 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பெரும்பாலும் தேய்மானம் அடைந்தும், அரவை திறன் குறைந்து, சர்க்கரை உற்பத்தி பாதித்தது.ஆலை இயந்திரங்களை புதுப்பிக்க, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.வழக்கமாக, மார்ச் மாதத்தில், பாய்லர் இளஞ்சூடு ஏற்றப்பட்டு, ஏப்.,1 முதல் கரும்பு அரவை துவங்கும். மூன்று ஆண்டுகளாக, இயந்திரங்கள் பழுது, பராமரிப்பில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், ஆலை இயக்க முடியாமல், மூடப்பட்டுள்ளது.மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள், கரும்பு வெட்டு ஆட்கள், வாகன டிரைவர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதித்துள்ளனர்.ஆலையை முழுமையாக நவீனப்படுத்த, முதற்கட்டமாக, 56 கோடி ரூபாய் தேவை என, அரசுக்கு சில ஆண்டுகளுக்கு முன், கருத்துரு அனுப்பி வைத்தும், நிதி ஒதுக்கவில்லை.பின் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக புனரமைப்பு செய்ய, 160 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம், அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'தமிழகத்தில், கூட்டுறவு முறையில் துவக்கப்பட்ட முதல் சர்க்கரை ஆலை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையாகும். கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த ஆலை மூடப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. சர்க்கரை ஆலையை புதுப்பித்து, உற்பத்தியை மீண்டும் துவக்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கை குறித்து நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் நிலையில், இன்று, உடுமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வரும், முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து, அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று, தினமலர் நாளிதழில் இன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.அதன் எதிரொலியாக, இன்று உடுமலையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிட்டார். 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்' என்று முதல்வர் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு, மூன்று மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.