உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகள் குமுறல்: கலெக்டர் செவியை எட்டுமா?

மாற்றுத்திறனாளிகள் குமுறல்: கலெக்டர் செவியை எட்டுமா?

திருப்பூர்:மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவுமனையில், சிறிய அறையில் நடத்தப்படுகிறது. சாய் தளம், குடிநீர், பேட்டரி வாகனம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இன்றி, கால்கடுக்க மாற்றுத்திறனாளிகளும், உடன் வருவோரும் காத்திருக்க வேண்டியுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமை, உடல் பாதித்தோர்; வெள்ளிக்கிழமை மனநலம், அறிவு சார் குறைபாடுள்ளோருக்கென, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைக்கான முகாம் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு பதில், அந்தந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் முகாம் நடக்கிறது. மாவட்ட அளவிலான அடையாள அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது; மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டை (யு.டி.ஐ.டி.,) பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் - தாராபுரம் ரோடு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 8ம் தேதி உடல் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கும், 10ம் தேதி, மனநலம் பாதித்தோருக்கும் முகாம் நடந்தது. கால்கடுக்க நிற்கிறோம் மாற்றுவோம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிறுவனர் மகாதேவன் கூறியதாவது: மருத்துவமனையில், அறை எண்: 96ல், மிகச்சிறிய அறையிலேயே, முகாம் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், உடன் வரும் பாதுகாவலர்கள் 20 பேர் மட்டுமே அமர முடிகிறது. பெரும்பாலானோர், அறைக்கு வெளியே வராண்டாவில் கால் கடுக்க காத்து நிற்கவேண்டியுள்ளது. அருகாமையில் குடிநீர் வசதி இல்லை; வீல் சேர் வைக்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகள் அணுகும்வகையில், பொது பயன்பாட்டு கட்டடங்கள் இருக்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவமனையில், முகாம் நடைபெறும் அறைக்கு செல்ல, சாய்தளம் கூட இல்லை. பிணவறை பகுதியில் உள்ள சாய்தளத்தை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளை, பாதுகாப்பாளர்கள் திட்டுகின்றனர். வெவ்வேறு நாளால் குழப்பம் இருவேறுவகை மாற்றுத்திறனாளிகளுக்கு, வெவ்வேறு நாட்களில் முகாம் நடத்துவதால் குழப்பம் ஏற்படுகிறது. நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, சரிசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை, வழக்கம்போல், விசாலமான இடவசதியுள்ள மற்றும் எளிதில் அணுகத்தக்க வகையிலான கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலேயே நடத்தவேண்டும். வாரம் இரண்டு நாட்கள் நடத்தும் முகாமிலும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் துயர் போக்க, கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். --- 2 படங்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான முகாம் நடந்தது. முகாம் நடந்த அறை சிறியது என்பதால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் கால்கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சாய் தளம் இல்லாததால், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. தவழ்ந்து கடக்கிறோம் கலெக்டர் அலுவலகத்தில், நுழைவாயில் முதல் முகாம் அரங்கு வரை, பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது; இதனால், மாற்றுத்திறனாளிகள் சுலபமாக செல்லமுடிகிறது. மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலோ, அத்தகைய வசதியில்லை. நுழைவாயிலிலிருந்து, முகாம் நடைபெறும் அறை வரையிலான நீண்ட துாரத்தை தவழ்ந்து கொண்டே கடப்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. - மகாதேவன், நிறுவனர், மாற்றுவோம் மாற்றுத்திறனாளிகள் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி