பணத்தை மீட்டுத்தர வேண்டும் :கலெக்டர் ஆபீசில் பெண்கள் தர்ணா
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், உடுமலையை சேர்ந்த பெண்கள், மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்பெண்கள் கூறியதாவது: கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம், வீட்டிலிருந்தபடியே பகுதி நேரம் வேலை செய்து சம்பாதிக்கலாம் என விளம்பரப்படுத்தியிருந்தது. அதனை நம்பி, நாங்கள் ஒவ்வொருவரும், 10 ஆயிரம் ரூபாய் வீதம் முன்பணம் செலுத்தி, இணைந்தோம். பணம் செலுத்தியவர்களுக்கு, 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்கொண்டு பணம் செலுத்தினால், வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும் என்றனர். இதனால், 2ம் கட்டமாக, ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தினோம். ஆனால், பொருட்கள் வழங்கவில்லை. இதுதொடர்பாக கேட்டபோது, சரியாக பதிலளிக்கவில்லை. இழந்த பணத்தை மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.