உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆயக்கட்டில் நெல் நாற்றங்கால்; நீர்மட்டம் திருப்தியால் பணி

 ஆயக்கட்டில் நெல் நாற்றங்கால்; நீர்மட்டம் திருப்தியால் பணி

உடுமலை: அமராவதி அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், அடுத்த போக நெல் சாகுபடிக்கு, விவசாயிகள் நாற்றங்கால் அமைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. இந்த அணைக்கு, மேற்கு தொடர்ச்சி மலையில், கேரள மாநிலம் மறையூர், சின்னார் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து இருந்து வருகிறது. மடத்துக்குளம் பகுதியில், நெற் பயிர், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது அமராவதி அணைக்கு, வடகிழக்கு பருவமழையால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்மட்டமும் மொத்தமுள்ள 90 அடியில், 77 அடியாக உள்ளது. மேலும், அமராவதி அணை வாயிலாக, பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்மட்டத்தை பொறுத்து, முன்பு, முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக, இரு போக நெல் சாகுபடி மட்டுமே மேற்கொள்கின்றனர். பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன பகுதிகளில், தற்போது அடுத்த போக நெல் சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். குறிப்பாக மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில், நாற்றங்கால் அமைத்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: கடந்த இரு சீசன்களில், நோய்த்தாக்குதலால், நெல் சாகுபடி பாதித்து, விளைச்சல் குறைந்தது. கடந்த சீசன் அறுவடையின் போது மழை பெய்ததால், பணிகள் பாதித்தது. தற்போது அமராவதி அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், சாகுபடி காலம் முழுவதும் போதுமான தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாற்றங்கால் அமைத்துள்ளோம். நடவு துவங்கியதும், வேளாண்துறையினர் வட்டாரவாரியாக தொழில்நுட்ப ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, நோய்த்தடுப்புக்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை