எழுத்தும் - வாசிப்பும் தான் எழுச்சி!
ஆங்கிலேயரின் பிடியில் இருந்த நம் நாட்டின் விடுதலை பின்னணியில், எண்ணற்றோரின் தியாகங்கள் நிறைந்தும், மறைந்தும் இருக்கின்றன. அக்காலகட்டத்தில் எழுத்தும், வாசிப்பும் தான், மிகப்பெரும் எழுச்சி, புரட்சியை ஏற்படுத்தியது, என்பதை வரலாறு உணர்த்தும்.'புத்தகம், செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் தான், தலைவர்களாக உருவெடுக்கின்றனர்' என்பது, இன்றளவும் தொடர்கிறது. ஒரு புத்தகம் அல்லது செய்தித்தாளை பக்கத்துக்கு பக்கம் புரட்டி படிக்கும் போது, எந்வொரு குறுக்கீடும், இடையூறும் இல்லாமல், புத்தகத்தின் பக்கங்களில் புதைந்துக் கிடக்கும் தகவல்கள் ஆழ்மனதில் அழுத்தம் திருத்தமாக பதியும். ஆனால், தொழிற்நுட்ப வளர்ச்சியில், தகவல் பரிமாற்ற சாதனங்களாக உருவெடுத்துள்ள வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள், இன்றைய இளைய தலைமுறையினரை சிறை பிடித்திருக்கிறது.அந்த சமூக ஊடகங்களில் அறிவு சார்ந்த தகவல் தேடலின் போது, இடையிடையே திணிக் கப்படும் விளம்பரங்களும், வேறு, வேறு இணையதள பக்கங்களும் வாசிக்கும் மனநிலையை சிதைக்கிறது, என்பதை மறுக்க முடியாது. டிஜிட்டல் வாசிப்பு என்பது, வர்த்தகம் சார்ந்த விஷயமாக மாறி, வாசிப்பாளர்களை தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொள்ளும் வர்த்தக சூழலை ஏற்படுத்திவிட்டது. எதிலும், வர்த்தகமயம் என்பது, டிஜிட்டல் வாசிப்பிலும் வந்துவிட்டது.''பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் நான்காவது துாண். அது, சக்திமிக்கது என்பது நிச் சயம். ஆனால், அதை தவறாகப் பயன்படுத்துவது குற்றமாகும்” என குறிப்பிட்டார் மகாத்மா காந்தி. நாளிதழ்களை மேம்படுத்தவும், செய்தித்தாளை எடுத்து ஒவ்வொரு நாளும் படிப்பதற்கு மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் தான், ஆண்டுதோறும், ஜன., 29ல் இந்திய செய்தித்தாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.