தி.மலை கிரிவலத்தில் குழந்தைகளை வைத்து யாசகம் பெற்றால் நடவடிக்கை
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை, புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணி குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், போலீசார், சமூக நலத்துறை, வருவாய் துறை என அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்து போக்குவரத்து சீரமைக்கவும், கிரிவலப்பாதையை துாய்மையாக வைத்திருக்கவும், கோவிலினுள் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பதை தடுக்க வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் திருநங்கைகள் மீதும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வைத்து யாசகம் பெறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.யாசகம் பெறும் முதியோர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோரிடம் விசாரணை நடத்தி, காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.