இறைச்சிக்காக வனப்பகுதியில் ஆமை பிடித்த 2 பேர் கைது
தண்டராம்பட்டு, தண்டராம்பட்டு அருகே, இறைச்சிக்காக வனப்பகுதியில் ஆமை பிடித்து வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி வனச்சரக அலுவலர் வெங்கட்ராமன் தலைமையிலான வனக்காப்பாளர்கள் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னியம்பேட்டை வனப்பகுதியில் மல்காப்பூர் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் உடையார் குப்பத்தை சேர்ந்த வசந்தகுமார், 35, சகாயபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய செல்வம், 29, என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வனப்பகுதியில் ஆமையை பிடித்து, இறைச்சிக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உயிருடன் அவர்கள் வைத்திருந்த இரு ஆமையை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவற்றை வனப்பகுதியில் விட்டனர். மேலும், வசந்தகுமார், ஆரோக்கிய செல்வம் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.