மழைக்கு இடிந்த வீட்டு சுவர் தாத்தா பலி பேரன்கள் காயம்
ஆரணி:ஆரணி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாத்தா பலியானார்; இரு பேரன்கள் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புஷ்பகிரியை சேர்ந்தவர் துரைசாமி, 80. இவர், சில நாட்களாக, ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள மகள் அலமேலுக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டில் தங்கியிருந்தார். சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்ததால், ஓட்டு வீட்டின் சுவர் நனைந்து பாதிப்படைந்தது. நேற்று அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், துரைசாமி, அவருடன் விளையாடிக் கொண்டிருந்த அலமேலுவின் மகன்கள் திவாகர், 8, விக்னேஷ், 5, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். மூவரும் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து மீட்டனர். துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திவாகர், விக்னேஷ் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.