திருவண்ணாமலையில் தீபத்தன்று மலை ஏற தடை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீபத்தன்று மலை ஏற தடை விதித்து, கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள, 2,668 அடி உயர மலை உச்சியில், டிச., 3ல், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபம் ஏற்றும் நிகழ்வை காண பக்தர்கள் விரதமிருந்து, மலை ஏறி சென்று வழிபடுவது வழக்கம். கடந்த ஆண்டு இந்த மலையில் மண் சரிவு ஏற்பட்டு, ஏழு பேர் பலியான சம்பவம் நடந்ததால், கடந்தாண்டு தீபத்தன்று பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டும் மழை காரணமாக மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆண்டு 'பெஞ்சல்' புயல் காரணமாக கனமழை பெய்தது. தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டு தீபத்தன்று மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது 'டிட்வா' புயலால் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுநர் குழு அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதி தன்மை அற்றும், நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மைய பகுதிகளில் பல்வேறு தளர்வான பாறைகள் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுனர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டும், மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மலையேறும் பாதையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.