தீப திருவிழாவின் மஹா ரத ஓட்டம் சிறப்பாக நடந்ததற்கு பரிகார பூஜை
திருவண்ணாமலை, டிச. 12-திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மஹாரத ஓட்டம் சிறப்பாக நடந்ததற்கு பரிகார பூஜை நடத்தப்பட்டது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று முன்தினம், 10 ம் தேதி நடந்த, 7ம் நாள் திருவிழாவில், மஹா ரத ஓட்டம் நடந்தது. இதில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்ற பராசக்தி அம்மன் தேர், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இதில் மஹா ரத ஓட்டம், எவ்வித அசம்பாவிதமும் இன்றி, இனிதே மஹாரதத்தை ஓட்டி சென்ற பிரம்மாவிற்கு நன்றி சொல்லியும், வீதி உலா வந்த தேரின் மேல் மனிதர்கள் ஏறியதால், அவர்களின் கால் படும் தவறுதலுக்கு, பரிகார பூஜையும் மஹாரதத்திற்கு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த, 8ம் நாள் விழாவில் காலை, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில், பிரம்மாவிற்கு காட்சி அளித்தும், மாலை, 4:00 மணிக்கு தங்கமேருவில் பிச்சாண்டவர் வீதி உலா, இரவு, 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தனித்தனி குதிரை வாகனத்தில் மாடவீதி உலாவும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.