ரூ.16 கோடியில் கட்டிய பாலம் 3 மாதத்தில் இடிந்த அவலம்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானுார் கிராமங்களை இணைக்கும் பாலம், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அப்பகுதி, 16 கிராம மக்கள் பயனடையும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மூலம், 'நபார்டு' வங்கி மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் கடந்த 2024 செப்., 2ல் முடிக்கப்பட்டது. அமைச்சர் வேலு, இதை மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த செப்., 2ல் திறந்து வைத்தார்.இந்நிலையில், 'பெஞ்சல்' புயல் மழையால், சாத்தனுார் அணை நிரம்பி, 1.60 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட, மூன்று மாதத்திலேயே பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.இந்த பாலம் வழியாக விவசாயிகள், 20,000 ஏக்கரில் பயிரிட்ட கரும்பை, அரவைக்காக, மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரி மற்றும் டிராக்டரில் எடுத்து செல்வது வழக்கம். பாலம் இடிந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சரி செய்வதாக உறுதி
இதற்கிடையில், அரசு வெளியிட்டுஉள்ள விளக்கம்:தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தின் நீளம் 250 மீட்டர், அகலம் 12 மீட்டர். ஆண்டு சராசரி மழையளவு, சாத்தனுார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இப்பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு, 54,417 கன அடி. திறந்தவெளி அடித்தளம் மற்றும், 11 வட்ட வடிவ துாண்கள் அமைத்து, பாலம் நல்ல தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டது. பெஞ்சல் புயல் காரணமாக, வரலாறு காணாத வகையில், 45 செ.மீ., மேல் கன மழை பெய்தது.சாத்தனுார் அணையில் இருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட, நான்கு மடங்கு அதிகமாக, வினாடிக்கு, 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டது.இந்த பாலமானது, சாத்தனுார் அணையில் இருந்து, 24 கி.மீ., தொலைவில் உள்ளது. தொடர் மழை மற்றும் பாம்பாறு நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், இப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல், 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்ததால், பாலம் பெரும் சேதம் அடைந்தது. இதனால், போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து, மீண்டும் பாலம் சரி செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.