ரூ.5.26 லட்சம் கொள்ளை மும்பையில் சிக்கிய திருடன்
செங்கம்,:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பீமானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி தீபா, 42; அங்கன்வாடி பணியாளர். இவர், தன் கணவருடன் கடந்த ஆண்டு, செப்., 12ல், செங்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து, 5.26 லட்சம் ரூபாயை எடுத்து மொபட்டில் வைத்து பூட்டினார்.பின், இருவரும் அருகில் உள்ள கடையில் டீ குடிக்கச் சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மொபட் பெட்டியை உடைத்து, 5.26 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கர்நாடக மாநிலம், பத்ராவதியைச் சேர்ந்த வெங்கடேஷ், 42, என்பவர் உட்பட நான்கு பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.மும்பையில் பதுங்கியிருந்த கொள்ளையன் வெங்கடேஷை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்; மேலும், இதில் தொடர்புடைய மூவரை தேடுகின்றனர்.