நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி இருவேறு இடங்களில் சோகம்
ஆரணி,: ஆரணி அருகே, இரு வேறு இடங்களில் நீரில் மூழ்கி, இரு சிறுவர்கள் பலியாகினர். தி.மலை மாவட்டம், ஆரணியை அடுத்த வளைக்காரகுன்று கிராமத்தை சேர்ந்த டிரைவர் மாதவன் மகன் பிரதீப், 3. இச்சிறுவன், நேற்று காலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, ஏரி கால்வாயில் தவறி விழுந்ததில், 100 அடி துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். பெற்றோர் சிறுவனை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேடியப்பன் நகர்
செங்கம் அடுத்த படிஅக்ரஹாரம் வேடியப்பன் நகரை சேர்ந்த தொழிலாளி பழனி மகன் லோகேஷ், 4. நேற்று காலை கனமழை பெய்து கொண்டிருந்தபோது, இச்சிறுவன் இயற்கை உபாதை கழிக்க வீட்டு பின்புறம் வாழை தோட்டத்திற்கு சென்றார்.அங்கு ஓடையை கடக்க முயன்றார். அப்போது ஓடையில் சென்ற வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு பலியானார். செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.