உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி அருகே திருவிழா பேனர் அகற்றியதை கண்டித்து மறியல் செய்த 54 பக்தர்கள் கைது தென்னுார் மந்தை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருச்சி அருகே திருவிழா பேனர் அகற்றியதை கண்டித்து மறியல் செய்த 54 பக்தர்கள் கைது தென்னுார் மந்தை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருச்சி:திருச்சியில் உக்கிரகாளியம்மன் கோவில் திருவிழாவுக்கு வைக்கப்பட்ட பேனர், இஸ்லாமியர்களின் வற்புறுத்தலால் அகற்றப்பட்டதை கண்டித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 54 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி தென்னுாரில் உள்ள உக்கிரகாளியம்மன் கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு பங்குனி மாதம், 15 நாட்கள் திருவிழா நடக்கும். வரும், 16ம் தேதி திருவிழாவுக்கான பூச்சொரிதல் விழா நடக்கிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டோம், குட்டி குடித்தல் வரும், ஏப்., 3ம் தேதி நடக்கிறது. கோவில் திருவிழாவுக்காக, தெய்வீக மகா சபை சார்பில் நிகழ்ச்சி நிரல் அடங்கிய பேனர், தென்னுார் மந்தையில் வைக்கப்பட்டது.அது மசூதிக்கு எதிர்புறம் இருப்பதால், அதற்கு அப்பகுதி இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நேற்று காலை, பேனரை அகற்றினர்.கோவில் திருவிழாவுக்கு வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதை அறிந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். மசூதிக்கும், பேனர் வைத்த இடத்துக்கும் சம்பந்தம் இல்லை, ஆகையால் அகற்றிய பேனரை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று கூறி, மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 54 பக்தர்கள் கைது செய்யப்பட்டு, உறையூர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.சம்பவத்தால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், தென்னுார் மந்தை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !