| ADDED : மே 28, 2024 09:48 PM
திருச்சி,:திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி. வீடுகளுக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பணிகளை செய்யும் ஒப்பந்தக்காரர். அண்மையில் இவர் ஒப்பந்தம் செய்த வீட்டின் அருகே உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. அது, வீட்டுக்கு இடையூறாக உள்ளதால், மாற்றியமைக்க கோரி, கிராப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்த வணிக உதவியாளர் அன்பழகன், 53, என்பவரை அணுகினார். அவர், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பின், 15,000 ரூபாய் என பேரம் பேசி முடிவு செய்யப்பட்டது. எனினும், லஞ்சம் தர விரும்பாத அந்தோணி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டனிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி, நேற்று காலை, கிராப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் அன்பழகனிடம் அந்தோணி பணத்தை கொடுக்க, அதை வாங்கிய அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.