உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பெண் வயிற்றில் துணி வைத்து தைத்த மருத்துவமனை ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பெண் வயிற்றில் துணி வைத்து தைத்த மருத்துவமனை ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண், வயிற்று வலியால் அவதிப்பட்டார். 2016 மார்ச் மாதம், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதாக கூறிய டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும், பெண்ணுக்கு வயிறு வலி குறையாததால், திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு, 'ஸ்கேன்' எடுத்து பார்த்த போது, பெண்ணின் சம்மதம் இல்லாமல் கர்ப்பப்பை அகற்றப்பட்டதோடு, காயத்துக்கு கட்டுப் போடும் துணியை வயிற்றில் வைத்து, தையல் போட்டிருந்ததும் தெரிந்தது. அதன் பின், திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில், பெண்ணுக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த துணி அகற்றப்பட்டது. இதையடுத்து, வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி கர்ப்பப்பையை அகற்றியதற்காக, 99 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, அப்பெண் தரப்பில், மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நுகர்வோர் ஆணைய நீதிபதி கருப்பையா, 'நோயாளியின் வயிற்றில் துணியை வைத்து தைத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக சிகிச்சை அளித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளியின் அனுமதியின்றி கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது. 'எனவே, மனுதாரருக்கு, ஒரு மாதத்துக்குள், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தவறினால், இழப்பீட்டு தொகைக்கு 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை