பள்ளியில் தேனீக்கள் கடித்து 10 மாணவ - மாணவியர் காயம்
திருச்சி:பள்ளி வளாகத்தில் மலைத்தேனீக்கள் கொட்டிய தில், 10 மாணவ - மாணவியர் காயமடைந்தனர். திருச்சி, விமானநிலையத்தில் அன்னை ஆசிரமம் பெயரில், அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி செயல்படுகின்றன. இந்த பள்ளி வளாகத்தில் மொத்தம், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை பள்ளி வளாகத்தில், மரத்தில் கட்டியிருந்த மலைத்தேனீயின் கூட்டை, பள்ளி மாணவர்கள் சிலர் கல்லால் அடித்ததில் கலைந்த தேனீக்கள், 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரை கடித்தன. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த சீதாலட்சுமி என்ற மாணவியும், பயஸ் என்ற மாணவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். திருச்சி தீயணைப்பு துறையினர், பள்ளி வளாகத்தில் இருந்த தேனீ கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.