திருச்சி:தமிழக கவர்னர் ரவி, தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து மனைவி லட்சுமியுடன், நேற்று காலை, ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரதமரின் கோவில்கள் துாய்மை திட்டத்தின்படி, ரங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள மேட்டழகிய சிங்கர் சன்னிதி படிக்கட்டுகளை, மனைவியுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோவில்கள், நம் வாழ்வின் மையப் புள்ளியாக இருந்து வருகின்றன. ஒரு கிராமம் கட்டமைக்கப்படும் போது, முதலில் கோவில் கட்டுமானத்துடன் உருவாக்கப்படும்.இது, நீண்ட காலமாக இருந்த அடிமைப்படுத்தல் மற்றும் காலனித்துவத்தால் பலவீனமாகி விட்டது.அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை நாடு முழுதும் கொண்டாடுகிறது. ஏனென்றால், ராமர் ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்கிறார்.கோவிலை சுத்தமாக வைத்திருப்பது, கோவில் நிர்வாகம் மட்டுமின்றி பக்தர்களுக்கும் பங்கு உள்ளது. கோவில்களை மட்டுமின்றி, பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். மயிலாடுதுறை
குத்தாலம் தாலுகா தேரழுந்துார் கிராமத்திற்கு தமிழக கவர்னர் ரவி, தன் மனைவியுடன் நேற்று வந்தார். அவரை கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, கம்பர் பிறந்து, வாழ்ந்த கம்பர்மேடு பகுதியை பார்வையிட்டார். தொல்லியல் துறை திருச்சி சரக கண்காணிப்பாளர் அணில்குமார் கம்பர்மேடு குறித்த விபரங்களை எடுத்துரைத்தார்.பின, வைணவ 108 திவ்ய தேசங்களில் 10வது தலமான தேரழுந்துார் ஆமருவியப்பன் கோவிலுக்கு சென்று பெருமாளை சேவித்தார். பின்னர், கம்பர் மணி மண்டபம் முன் உள்ள கம்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.