கும்மிருட்டில் எறும்பீஸ்வரர் மலைக்கோவில் அமைச்சர் மகேஷ் தொகுதியில் அவலம்
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே எறும்பீஸ்வரர் மலைக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இந்த சிவன் கோவில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.இந்த கோவில் கும்பாபிஷேகம், 27 ஆண்டுகளுக்கு பின், ஏப்., 7ம் தேதி நடந்தது. இதற்கான திருப்பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை, எந்த வேலையையும் சரியாக செய்யாமல், அரைகுறை வேலைகளுடன் கும்பாபிஷேகத்துக்கு ஒப்படைத்துஉள்ளனர்.அதேபோல், கோவில் மதிற்சுவர்கள் அப்படியே உள்ளன. கோவிலுக்குள் எறும்பீஸ்வரர் சன்னிதி, நறுங்குழல் நாயகி சன்னிதி ஆகியவற்றையும் புனரமைக்கவில்லை.கோவிலுக்கான மின் இணைப்பு ஒயர்கள் அனைத்தும் ஆங்காங்கே பிரிந்துள்ளன. கோவில் உள்ளே சாமி சிலைகள் கூட சரிவர புதுப்பிக்கப்படவில்லை.இதற்கு காரணமான, கோவில் பராமரிப்பு பணிக்காக எவ்வித நிதியையும் அறநிலைய துறை ஒதுக்கவில்லை. தொல்லியல் துறையும் செலவு செய்யவில்லை.இரு துறைகளும் கைவிட்டதால், தனியார் வாயிலாக பெறப்பட்ட நிதியை கொண்டு, புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது அந்த தனியாரின் கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் உள்ளது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.மலைக்கோவில் மீது பக்தர்களுக்கு தண்ணீர் வசதி, மின் விளக்கு வசதிகள் இல்லை. கோவில் வளாகத்தில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்துள்ள நிலையில், மலைக்கோவிலுக்கு செல்லும் வழி இருள் சூழ்ந்துள்ளது.மின் விளக்குகளை யார் சீரமைப்பது என்பதில் அறநிலைய துறையும், தொல்லியல் துறையும் போட்டி போடுவதால், மலைப்பாதை இருட்டில் உள்ளது. இரவு நேரத்தில் செல்லும் பக்தர்கள் மொபைல்போன் டார்ச் லைட் உதவியுடன் செல்கின்றனர்.எறும்பீஸ்வரர் கோவிலின் இந்நிலையால், பக்தர்கள் அவஸ்தைகளை சந்தித்து வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷின் திருவெறும்பூர் தொகுதியில் உள்ள இந்த கோவிலின் நிலை, பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.