காவலாளியை கட்டிப்போட்டு கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளை
திருச்சி:தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 65. கான்ட்ராக்டரான இவர், திருச்சி, கருமண்டபம் அருகே உள்ள பொன்நகரில் சொந்த வீட்டில் வசிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன், வீட்டைப் பூட்டிய சண்முகம், குடும்பத்துடன் ஒரத்தநாடு சென்றிருந்தார். காவலாளி மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். காவலாளி அவர்களை தடுத்ததால், அந்த நபர்கள் காவலாளியைத் தாக்கி அவரது இரண்டு கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டனர்.தொடர்ந்து, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.நேற்று காலை வீட்டுக்கு வந்த சண்முகத்தின் மனைவி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காவலாளி மயங்கிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். அவர், ஒரத்த நாட்டில் இருந்த கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்த நீதிமன்ற போலீசார், கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்தினர். பீரோவில் இருந்த, 40 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.