திருச்சி: திருச்சி மாநகராட்சி பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட இடத் தை, மீண்டும் தங்களின் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தவரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., -- பி.ஏ.,வான தாசில்தார் கைது செய்யப்பட்டார். தஞ்சையை சேர்ந்தவர் கோபி. இவருக்கு, திருச்சி கே.கே.நகரில், 11,000 சதுரடி இடம் உள்ளது. இந்த இடத்தை தவறுதலாக மாநகராட்சி இடம் என்று பதிவு செய்து விட்டனர். இதை மாற்றித்தர உரிய ஆவணங்களுடன், திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோபி விண்ணப்பித்தார். இதுதொடர்பாக, அவர் திருச்சி ஆர்.டி.ஓ., -- பி.ஏ.,வான தாசில்தார் அண்ணாதுரையை அணுகினார். அவரோ, 'இடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதா ல், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், கம்ப்யூட்டர் எஸ்.எல்.ஆரில் பெயர் மாற்றம் செய்து தருகிறேன்' என, கூறினார். கோபி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி, நேற்று மாலை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வைத்து, பணத்தை அண்ணாதுரையிடம் கோபி கொடுத்தார். அதை பெற்ற அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.