திருச்சி கலெக்டர் அலுவலகம் அமைச்சர் வீட்டுக்கு மிரட்டல்
திருச்சி:திருச்சியில், கலெக்டர் அலுவலகம் மற்றும் அமைச்சர் நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, நேற்று காலை, சுப்பிரமணியன் என்ற பெயரில் வந்த இ - மெயிலில், 'திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், மதியம் 2:00 மணிக்குள், அது வெடிக்கும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகம் வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மற்றும் கருவிகளுடன் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அமைச்சர் வீடு : கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடந்த போது, தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேருவின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தகவல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், அமைச்சர் வீட்டுக்கும் சென்று சோதனை செய்தனர். இதுவும் புரளி என தெரிய வந்தது. ஒரே நாளில், கலெக்டர் அலுவலகம் மற்றும் அமைச்சர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.