சுங்கச்சாவடி கட்டணம் பல மடங்கு உயர்வு தனியார் பஸ்கள் போராட்டம்: பயணியர் அவதி
திருச்சி:திருச்சி அருகே உள்ள துவாக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், தனியார் பஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பயணியரை நடுவழியில் இறக்கி விட்டனர். இதனால், திருச்சி - தஞ்சை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள துவாக்குடியில் சுங்கக் கட்டண வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில் சுங்கக் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. புதிய சுங்கக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அந்த சாவடியை கடந்து செல்லும் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறைக்க வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை தஞ்சையில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து தஞ்சைக்கும் இயக்கப்படும், 13 பஸ்களை விடாமல், புதிய கட்டணம் செலுத்தினால் தான் அனுமதிக்க முடியும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிரைவர்கள், சுங்கச்சாவடிகளின் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த தனியார் பஸ்களில் வந்த பயணியர் அவதியடைந்து, நடுவழியில் இறங்கி, மாற்று வாகனங்களில் சென்றனர்.தனியார் பஸ்களின் போராட்டம் குறித்து அறிந்த துவாக்குடி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களை அழைத்து பேச்சு நடத்தினர். அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இரு தரப்பையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று சமரசம் பேசினர்.அதையடுத்து, ஒரு மணி நேரமாக திருச்சி - தஞ்சை சாலையை மறித்து நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ்கள், பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டது. இதனால், ஒரு மணி நேரமாக திருச்சி - தஞ்சை சாலையில் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரடைந்தது. இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'தனியார் பஸ்களுக்கு மாதம், 8,700 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது தற்போது, 10,190 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.'ஆனால், 50 டிரிப்புகள் மட்டுமே செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில், 50 டிரிப்புகள் முடிந்து விடும். 'இதனால் வாரத்துக்கு ஒருமுறை, 10,190 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு, மாதந்தோறும் சுங்கக்கட்டணத்துக்கு மட்டும், 40,000 முதல், 50,000 வரை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிறோம்' என்றனர்.