திருச்சி: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ரமணா, திருச்சி, உறையூர் தேவாங்க நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நேற்று மாலை திடீரென ஆய்வு செய்தார். அதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நஷ்டத்தில் இயங்கும், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயக்குவதுக்காக அனைத்துத் துறை அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த அறி க்கை முதல்வருக்கு தாக்கல் செய்யப்படும். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நெசவாளர் வாழ்க்கை தரம் மேம்படுத்துவதுக்கு கைத்தறித்துறையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் கைத்தறித்துறை நஷ்டத்தில் இயங்கியது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதுக்கு நீதிமன்றத்தில் தடையாணை உள்ளது. தடை ஆணை விளக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நூற்பாலைகளிலிருந்து கடன் மூலம் நெசவாளர்களுக்கு நூல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கைத்தறி துணி நூல்களில் புதிய ரகங்கள் உற்பத்தி செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரவேண்டும். நசிந்து போன நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த வாரிசுதாரர்களை மீண்டும் ஈடுபடுத்தி வேலை வழங்க வேண்டும். நெசவாளருக்கு வழங்கப்படும் கூலியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிவபதி, எம்.பி., குமார், ஆர்.டி.ஓ., சங்கீதா, எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பூனாட்சி, சந்திரசேகர், இந்திராகாந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் மனோகர் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.