திருச்சியின் பிரபல ரவுடி புதுச்சேரியில் கைது
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி மூலமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பலரின் நிலங்களை அபகரித்துள்ளதாக, திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, பிரபல ரவுடிகளின் பட்டியலை எஸ்.பி., தயாரித்து, அதில், 14 பேரின் வீடுகளில், 'ஆப்பரேஷன் அகழி' என்ற பெயரில் அண்மையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.இதில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட 258 நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில், 66 அசல் ஆவணங்கள், பிரபல ரவுடி பட்டறை சுரேஷ், 44, என்பவரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் கந்து வட்டி தொழில் மூலமாக வந்தவை என்பது தெரிந்தது.இதையடுத்து, திருவெறும்பூர் போலீசார் பட்டறை சுரேசை தேடி வந்தனர். அவர் குடும்பத்துடன் புதுச்சேரியில் இருப்பதாக தகவல் கிடைத்து, நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்த சுரேசை, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் பிடித்து, திருச்சிக்கு கொண்டு வந்தனர்.இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவர், ஐ.ஜே.கே., கட்சியின் மாநில இளைஞரணி செயலராக உள்ளார் என கூறப்படுகிறது.