யாத்ரி நிவாஸ் பெயரில் இணையதள மோசடி
திருச்சி: ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் தங்குவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதாக கூறி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட போலி இணையதளங்கள் முடக்கப்பட்டன. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உட்பட பல்வேறு கோவில்களுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் கரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் யாத்ரி நிவாஸ் விடுதி திறக்கப்பட்டது. இங்கு அனைத்து வசதிகளுடன் தனி அறை, குடும்பத்துடன் தங்கும் அறை, தனி காட்டேஜ்கள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், இங்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கி, கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். இங்கு தங்குவதற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்து தருவதாக கூறி, சிலர் வடமாநில முகவரியுடன் இணையதளங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டனர். போலி இணையதளங்கள், வாட்ஸாப் லிங்க்குகளை துவங்கி, பக்தர்களிடம் மோசடி நடப்பது தொடர்பாக யாத்ரி நிவாஸ் நிர்வாகம் கொடுத்த புகார்படி, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, போலி முகவரி கொண்ட நான்கு இணையதளங்களை முடக்கியுள்ளனர். 'யாத்ரி நிவாஸில் தங்குவதற்கு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியாது. யாத்ரி நிவாஸில் தங்க விரும்புவோர், போன் மூலம் தகவல் கொடுத்து விட்டு நேரடியாக வந்து பணம் செலுத்தி தான் அறைகள் எடுக்க முடியும். 'பக்தர்கள் யாரும் போலி இணையதளங்களில் முன்பதிவு செய்து ஏமாற வேண்டாம்' என, யாத்ரி நிவாஸ் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.