தந்தை மீது மிளகாய் பொடி துாவி குழந்தையை கடத்திய கும்பல்
குடியாத்தம்,:தந்தை மீது மிளகாய் பொடி துாவி குழந்தையை, மர்ம நபர்கள் காரில் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலுார் மாவட்டம், குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டையை சேர்ந்தவர் வேணு, மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி ஜனனி. தம்பதியின் மகன் யோகேஷ், 4, குடியாத்தம் பள்ளியில் பிரீ.கே.ஜி., படிக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம், 12:30 மணிக்கு வேணு, தன் மகன் யோகேஷை மதிய உணவு இடைவேளைக்காக, டூ - வீலரில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்தவர்கள், வேணு மீது, மிளகாய் பொடி துாவி விட்டு, குழந்தை யோகேஷை காரில் கடத்தி தப்பினர். வேணு புகாரின்படி, குடியாத்தம் நகர காவல் துறையினர் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். குடியாத்தம் நகர காவல் துறையினர், அப்பகுதி 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், கடத்தல்காரர்கள் இரு நாட்களாக நோட்டமிட்டு குழந்தையை கடத்தியது தெரிந்தது. இதற்கிடையே, தனிப்படை போலீசார், திருப்பத்துார் மாவட்டம், மாதனுார் பகுதியில், பெங்களூரு- - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு அருகே தனியாக நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். பின், குழந்தையை வேலுார் எஸ்.பி., மயில்வாகனன், பெற்றோரிடம் ஒப்படைத்தார். அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். கு ழந்தையை கடத்திய வர்கள் யார், எதற்காக கடத்தினர், கடத் தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது என்பது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.