பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
காட்பாடி: ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர், ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி காயமடைந்தார். வேலுார் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய நடைமேடை 2ல், நேற்று காலை, 11:00 மணிக்கு கோவை - சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. இந்த ரயிலில் செல்ல பெண் பயணி ஒருவர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அவர், இரண்டாவது நடைமேடைக்கு வருவதற்குள் ரயில் நகர துவங்கியது. உடனடியாக அவர் ரயிலில் ஏற முயன்றபோது, தடுமாறி ரயிலில் கம்பியை பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ஆர்.பி.எப்., போலீஸ்காரர் ஆதித்யகுமார் விரைந்து செயல்பட்டு, பெண் பயணியை ரயில் பெட்டிக் குள் ஏற்றிவிட்டு காப்பாற்றினார். இதில், ஆதித்யகுமார் பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையில் மாட்டிக் கொண்டார். பயணியர் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அங்கிருந்தோர் அவரை மீட்டு காட்பாடி ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர்.