வேலுார் : ''தி.மு.க., விற்கு ஏன் வாக்களித்தோம் என, வாக்களித்த மக்கள் வருந்துகிறார்கள்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி கூறினார்.வேலுார் மாவட்டத்தில் மண் கடத்தல், மணல் கடத்தல், மற்றும் கல்குவாரி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை கண்டித்து, வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பஸ் ஸ்டாண்டில், வேலுார் புறநகர் மாவட்டம், அ.தி.மு.க., சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வேலுார் மாவட்டத்தில், மண், மணல் கடத்தல், மற்றும் சட்டத்திற்கு புறம்பாக கல்குவாரிகள் செயல்படுவதை கண்டித்தும், தி.மு.க., அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.பின்னர், முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., அரசு மணல் கடத்தல், மணல் கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக கல்குவாரி செயல்பட அனுமதிக்கிறது. தி.மு.க, ஆட்சிக்கு வந்து, 3 ஆண்டுகள் ஆகிறது. இந்தவேளையில், ஏன், தி.மு.க.,விற்கு வாக்களித்தோம் என, தவறை உணர்ந்து வாக்களித்த மக்கள் வருந்துகிறார்கள். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் ரீதியாக பக்குவப்படவில்லை, அண்ணாமலை போலீசில் பணியாற்றுவதுபோல், தான்தோன்றி தனமாக மிரட்டும் வகையில் பேசுகிறார்.அண்ணாமலை, தான் துாய்மையானவர் போலவும், மற்றவர்கள் இல்லாதது போலவும் பேசி வருகிறார். ஊழல் கறை எல்லா இடத்திலும் உள்ளது. இதை எடுத்து சொன்னால் தாங்க மாட்டார்கள். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை, போன்றவற்றை நடத்தக்கூடாது என, எதுவும் கூறப்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறிவிட்டார். இதை அ.தி.மு.க., அரசியலாக்க விரும்பவில்லை. இதை வைத்து சிலர், அரசியல் லாபம் அடைய, இதுபோன்று கூறுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.