வயலில் சரிந்த விடியல் பேருந்து
வேலுார்:விவசாய நிலத்தில் பாய்ந்த அரசு பேருந்தை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். வேலுார் பழைய பேருந்து நிலையத்திலிருந்து விருதம்பட்டு வழியாக லப்பை கிருஷ்ணாபுரம் வரை செல்லக்கூடிய அரசு மகளிர் விடியல் பேருந்து நேற்று காலை 20க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பசுலப்பாக்கம் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுனர், பேருந்தை இடது பக்கம் திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் இறங்கி சரிந்தது. பயணியர் அலறி கூச்சலிடவே, கிராம மக்கள் ஓடி வந்து பயணியரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பொக்லைன் மீட்பு இயந்திரம் கொண்டு வரப்பட்டு பேருந்து மீட்கப்பட்டது.