உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொலை வழக்கில் தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு ரத்து

கொலை வழக்கில் தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு ரத்து

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த பானிபூரி கடைகாரர் கொலையில் தொடர்புடைய சப் இன்ஸ்பெக்டரின் முன் ஜாமின் மனுவை கோர்ட் ரத்து செய்தது. விழுப்புரம் நாராயணன் நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன்(29). பானிபூரி கடை வைத்திருந்த இவருக்கு லட்சுமி(26) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தீனதயாளன் கடந்த மாதம் 21ம் தேதி அதிகாலை மர்ம நபர்களால் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது மனைவி லட்சுமி தூண்டுதலின் பேரில் தீனதயாளன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான மாமனார் நாகராஜ் தலைமையில் சதித்திட்டம் தீட்டி லட்சுமியின் கள்ளக்காதலன் முத்தமிழ்செல்வன், அவரது நண்பர் மோகன் ஆகியோர் மூலம் தீனதயாளனை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் லட்சுமி, முத்தமிழ்ச்செல்வன், மோகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவான சப் இன்ஸ்பெக்டர் நாகராஜை தேடி வந்தனர். தலைமறைவாக உள்ள நாகராஜ் முன் ஜாமின் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வக்கீல் கண்ணன் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார். இதன் மீது விசாரணை நடத்திய முதன்மை மாவட்ட நீதிபதி தியாக ராஜமூர்த்தி, வழக்கின் தன்மை கருதி சப் இன்ஸ் பெக்டர் நாகராஜிக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை