விழுப்புரம் : தமிழகத்தில் அரிசி, பருப்பைவிட கஞ்சா, கள்ளச்சாராயம் தான் தாராளமாக கிடைப்பதாக முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:மூன்று ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களின் விலை 5 மடங்கு உயர்ந்துள்ளது. ரேஷனில் அரிசி, பருப்பு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. பாமாயில் கிடைக்கவில்லை.தமிழகத்தில் அரிசி, பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ, சாராயம், கஞ்சா போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. மரக்காணத்தில் கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி, இரண்டு கடிதங்களை டி.ஜி.பி.,க்கு எழுதியிருந்தார். அதில், மெத்தனால், எத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கு தடையின்றி கிடைக்கும் மெத்தனாலை தடுக்க புதிய சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். உள்துறை செயலருக்கும், முதல்வருக்கும் அது தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்காததால், கள்ளக்குறிச்சியில் 67 பேர் இறந்துள்ளனர்.மின் கட்டண உயர்வை அடுத்து பஸ் கட்டணத்தை உயர்த்த போகிறார்கள். மின்சாரத்தை தடையின்றி வழங்கிவிட்டு, கட்டணத்தை உயர்த்தட்டும். மூன்றாண்டில் ஒரு யூனிட் மின்சாரத்தை கூட உற்பத்தி செய்யவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.