உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு ரூ.1.20 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு ரூ.1.20 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திண்டிவனம் : திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில், ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மொளசூரில், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு, ஓட்டுநர் உரிமம் வழங்கல், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., வேல்முருகன் (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர்கள் கோபி, சக்கரபாணி உள்ளிட்ட குழுவினர் நேற்று மதியம் 12.45 மணிளவில் திடீர் ரெய்டு நடத்தினர்.வாகனங்களுக்கு எப்.சி., மற்றும் டிரைவிங் உரிமம் வழங்குதற்கான பயிற்சி அளிக்கும் இடத்திலும் சோதனை நடத்தினர். இரவு 8.30 மணி வரை 7 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் புரோக்கர்கள், டிரைவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 920 கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொடர்புடைய அதிகாரிகள், ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

சாலை மறியல்

ஓட்டுர் உரிமம் பெறுவது உள்ளிட்ட பணிகளுக்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். அதனால், வாகன பயிற்சி மையத்தில் பணத்துடன் நின்றிருந்த புரோக்கர்கள், டிரைவர்களிடம் இருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்த பணத்தை திருப்பி தரக்கோரி டிரைவர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பிற்பகல் 3 மணியிலிருந்து 3.15 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை